காதல் கசக்குமா...?
"ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...
என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.
காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.
கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.
தேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை.
ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது.
சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.
இப்பாடலில்
நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது என்றும் கூறப் படுகிறது.
தகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன.
வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள்.
இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு.
0 comments:
Post a Comment