காதல் திருமணம் எந்த அளவிற்கு சிறப்பானது?

சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. 


ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.

தற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள். உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில் மேற்கத்திய உடையில் வலம் வரும் இளைய சமுதாயம் பழைய காலம் என்பது காதலுக்கு எதிரானது என்ற புரிதலில் உள்ளார்கள்.

அடிப்படையில் தற்காலத்தில் காதல் உணர்வு வருவதற்கு முற்காலத்தில் முன்னோர்களின் செயலால் நம்முள் ஏற்பட்ட சமஸ்காரங்கள் பரம்பரையாக தொடர்ந்து வருவதே காரணம். கலியுகம் என கூறும் முதியவர்களுக்கும், பழங்காலம் எனும் இளைய சமுதாயத்திற்கும் தெரிவிக்க வேண்டிய ஓர் விஷயம் உண்டு.

துவாபரயுகத்தில் பகவான் ஸ்ரீராமரும், திருதாயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் செய்தது என்ன? காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும் நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால் இணைதலும் தானே? பின்பு நாகரீகம் என்ற பெயரில் அன்பு வர்த்தகமாக மாற்றமடைந்ததும் திருமணம் பெரியோர்களால் நிட்சயிக்கப்பட்டது..!

இதன் மூலம் காதல் திருமணம் மட்டுமே நல்லது என கூறவில்லை. திருமண முறைகளில் அதுவும் ஒரு வகை. அதனால் கீழாக பார்த்து ஒதுக்கும் கலாச்சாரம் நம்மில் உள்ளது, அதை களைய வேண்டும் என்பதே என் கோரிக்கை. பலர் காதல் திருமணம் என்பதை கந்தர்வ விவாஹகம் என புராணங்களில் கூறப்பட்டதாக விளக்குகிறார்கள். கந்தர்வ திருமணம் கூறப்பட்டதை தற்காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

கந்தர்வ திருமணம் என்பதை விளக்கினால் பல கலாச்சார காவலர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தங்களிடையே ஈர்ப்பை உணர்ந்தால், அவர்களாகவே இணைந்து மகிழ்வது கந்தர்வ நிலை. அவர்கள் குடும்பமாக இருக்க மாட்டார்கள், மேலும் அவர்களிடையே நீடித்த பந்தம் இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரின் பின்புலத்தையும் கூறிக்கொள்ள தேவை இல்லை. திருமணமான ஒரு பெண் தன் கணவனிடம் தான் கந்தர்வ மணம் கொண்ட மற்றொருவரை அறிமுகபடுத்தி வாழ்ந்த காலம் அது. நினைத்து பார்த்தாலே ஜீரணக்க முடியவில்லை அல்லவா? ஆனால் நடந்தது.

மேலை நாட்டில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்கள் அறிது. இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் அங்கே பிரிவுகளும் அதிகம். இந்தியாவில் நிச்சயக்கப்பட்ட திருமணம் ஒருவிதத்தில் பிரிவுகளையும் பல துணை தேடும் நோக்கத்தையும் தடை செய்கிறது.

இதனால் காதல் திருமணம் நல்லதா அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணம் நல்லதா என்ற விவாதத்திற்கு வரவில்லை. எத்தகைய திருமணமாக இருந்தாலும் அடிப்படையில் இருவரின் உள்ளப்புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.

0 comments:

Post a Comment