காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!
காதல் என்பது இரு இதயங்களின் சங்கமம். பார்த்து பார்த்து கட்டிய காதல் கோட்டை சட்டென்று சரிந்து போனால் மனது தளர்ந்துதான் போகும். பிரிவு என்பது காதலர்களுக்கு இடையே ஏற்படும் நிகழ்வுதானே ஒழிய காதலுக்கு இடையே ஏற்படுவதில்லை.
காதலர்களிடையே எதிர்பாராமல் பிரிவு ஏற்பட்டு காதல் தோல்வியில் முடிந்தால் நொறுங்கிப்போய் அமர்ந்து விடாதீர்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். காதல் தோல்வியில் இருந்து மீள அவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றுங்களேன்.
உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்
காதலிக்கும் போது மனது உற்சாகமாக இருக்கும். உலகமே நமக்காகப் படைக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் அந்த காதலில் தோல்வி என்று வந்துவிட்டால் உலகமே இருண்டுவிடும். எதைப்பற்றியும் சிந்திக்கத் தோன்றாது. எனவே உங்களின் இந்த சோக மனநிலையை மாற்றுங்கள். எந்த சூழ்நிலையிலும் தனிமையில் இருக்கவேண்டாம். நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பேசி மனதை உற்சாகப்படுத்த முயலுங்கள்.
மனதை லேசாக்குங்கள்
காதலில் தோல்வி என்று கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும். சமயத்தில் இது இதயநோயில் கூட கொண்டுபோய் விட்டுவிடும். எனவே மனதை லேசாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். மனம் வலிக்கத்தான் செய்யும், வேறு வழி இல்லை இதமான பாடல்களை கேளுங்கள். மனதின் ரணத்தை ஆற்ற உதவும்.
நொறுங்கிப்போகாதீர்கள்
காதலின் தீவிரத்தை எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல காதல் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் தவிர்க்கமுடியாத சம்பவங்களை மனதளவில் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த பிரிவினால் சில நல்ல விசயங்கள் நடக்கப்போகிறது என்பதை மனதளவில் நம்ப ஆரம்பித்தால் போதும் தோல்வி என்பது மனதையும் உடலையும் பாதிக்காது.
புதிதாய் காதலியுங்கள்
காதல் தோல்வியை மறக்க புதிதாக காதலிப்பதுதான் சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள். வீட்டில் உள்ளவர்களை மனதார நேசியுங்கள். இத்தனைநாள் அவர்களை சரியாக கவனிக்காமல் விட்டிருக்கலாம். இனி உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும் எனவே உங்களுக்கான நேரத்தை பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்களுடன் செலவிடுங்கள். உங்களின் மனதில் இருந்த பாரம் குறையும். தோல்வி எண்ணம் தலை தூக்காமல் இருக்கும்.
இறைவனை வேண்டுங்கள்
தோல்வி என்பது ஏற்படக்கூடாதுதான் ஆனால் ஏற்பட்டுவிட்டது. வேறு வழியில்லை. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கான மனதைரியத்தை அளிக்கவேண்டும் என்று இளைவனிடம் வேண்டுங்கள். இறை நம்பிக்கை என்பது எத்தகைய தோல்வியையும் தூர விரட்டிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
0 comments:
Post a Comment