இகம் மறந்து
அகம் நிறைந்து
உன்னை ஆராதித்தது
என்னை விலகச் சொன்ன
உன் விஷ வார்த்தைகளுக்கா?

அவை என் செவி சேர்ந்த
மறு நொடியில்
முகம் மறந்து,
முகவரி மறந்து,
முழுப்பித்தனாய்
அலைந்தாலும்.......

வீடு மறந்து
வேலை மறந்து
நான் யாரென்பதை
நானே மறந்து
சித்தம் கலங்கித் திரிந்தாலும்.......

சிறுபிள்ளை
துலக்கி வைத்த
பாத்திரத்தில் ஒட்டியிருக்கும்
உணவின் மிச்சங்களைப்போல்,
உன் நினைவுகளின் சொச்சங்கள்
என் ஞாபகத்தட்டில்
ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது!

மூளையின் முக்கால் பாகம்
செத்து விட்டாலும்
கால் பாகத்தில்....
கடந்தவைகளும்,
நடந்தவைகளும்
நிரடுவதால்−நான்
நிற்கிறேன்,நடக்கிறேன்
உண்கிறேன்....ஆனால்
உறங்க மட்டும் முடியவில்லை!

நீ என்னை உதறியதை
உணர்ந்துகொள்ள
மூளைக்கு
முழுதாய் ஒரு வினாடிதான் ஆனது,
இதயம் உணர இன்னும்
எத்தனை யுகங்கள் வேண்டுமோ....?
நிலவு என்று
சொல்ல மறுத்தேன்
தேய்ந்தும் வளர்ந்தும்
வருவதால்....

வானம் போன்ற எம்
காதல் எல்லையற்றது
கண்கள் கொண்டு
அளக்க முற்படாதே...

கனவில் கூட உன்னைக்
காண மறுத்தேன்
கண்விழித்தால் நீ
கலைந்து போவதால்...

நிலவு.. வானம்...

எழுதாத கவி இல்லை
எழுத எழுதக குறையவுமில்லை.
ஒவ்வொரு தடவையும்
புதிதாக தெரிகிறது−புதிது
புதிதாகவும் தோன்றுகிறது...

நிலவை பார்க்கையில்
நிரந்தமில்லாதிருக்கிறது..காதல்
வானத்தை பார்க்கையில்
நிறைந்திருக்கிறது....காதல்

காதல் புதிர் மட்டுமல்ல
முரண் தொடர் கூட..

கனவில் பார்த்தால்
முற்றுப்பெறாது...காதல்
கவிகூட அப்படித்தான்
தோன்றுகிறது...

Added on 12:18 AM